கோவையில் ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்கிறார் உதயநிதி!

கோவை: கோவையில் 9.67 கோடி ரூபாயில் தயாரான ஹாக்கி மைதானத்தை வரும் 30ம் தேதி துணை முதலமைச்சரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் ஏராளமான ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால் இவர்கள் பயிற்சி பெற மாநகராட்சி அல்லது அரசு சார்பில் மைதானம் அமைக்கப்படவில்லை.

இதனால் கோவையில் அரசு சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக வெளிநாட்டில் இருந்து சிந்தடிக் டர்ப் (செயற்கை புற்கள்) வரவழைக்கப்பட்டன. ஆனால் அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த மைதானம் அமைக்கப்படாமல் பாதியில் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் ஹாக்கி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஹாக்கி மைதானத்தை மீண்டும் தயார் செய்ய மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹாக்கி மைதானம் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினர்.

அதன்பின்பு மைதானப் பணிகள் வேகமடைந்தன. அனைத்தும் பணிகளும் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு மைதானம் தயாராகி விட்டது. இந்த மைதானம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மைதானத்தை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் இரவிலும் இங்கு ஹாக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின் கோபுர விளக்குகள் உள்ளன. இதில் ஒவ்வொரு மின் கோபுர விளக்கிலும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் வீரர்கள், வீராங்கனைகள் உடை மாற்றும் அறை, ஓய்வறை, கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டு உள்ளது. ஹாக்கி மைதானத்திற்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.

சிந்தடிக் டர்ப் அமைக்கும் பணி சமீபத்தில் முடிவடைந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், வருகிற 30ம் தேதி (செவ்வாய்) உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக அங்கு பெயிண்ட் அடித்தல், மேடை அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Recent News

Video

Join WhatsApp