கோவை: பிரதம மந்திரி சூர்யாகார் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் வீடுகளில் சோலார் பேனலை பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இதுவரை சுமார் 9,000 வீடுகளில் சோலார் பேனல் (சூரிய மின் சக்தி) அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,700 வீடுகளில் நிறுவப்பட்டுள்ளன.
சமீபத்தில் சோலார் பேனல் விற்பனையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், இரு மாத மின் பயன்பாடு அளவு 500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள நுகர்வோர் குறித்த விவரங்கள் பகிரப்பட்டுள்ளது. இத்தகைய நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 2.12 லட்சமாக உள்ளனர்.
அடுத்த நிதியாண்டின் முடிவுக்குள் 40 ஆயிரம் நுகர்வோரை சோலார் பேனல் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்புகளுக்கு தற்போது இருதிசை மீட்டர்கள் நிறுவப்பட்டு வருகிறது. நுகர்வோர்கள் சோலார் பேனல் திட்டத்தை தேர்வு செய்தால், அந்த மீட்டர்கள் அதற்கேற்றவாறு மாற்றப்படும்.
குடியிருப்பு நுகர்வோரிடையே சோலார் பேனல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் பிரசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், வங்கிகள் பங்கேற்கும் முகாம்களையும் ஏற்பாடு செய்து, சோலார் பேனல் அமைப்புகளை நிறுவ நிதி வசதி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து 132 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் 71 சார்ஜிங் நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இச்சார்ஜிங் நிலையங்கள் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

