கோவை: நாளை முதல் பம்புகளின் விலையை 10-15% உயர்த்த தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பம்பு உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கொரொனா காலத்திற்கு பிறகு இந்த பம்பு உற்பத்தி தொழில்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்தனர்.
ஜி.எஸ்.டி வரி உயர்வு, மின்சாரத்தில் நிலை கட்டணம் உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பலவற்றால் இந்த தொழில் நெருக்கடிகளை சந்தித்து. தற்போது சீனாவில் இருந்து குறைந்த விலையில் பம்புகள் இறக்குமதி செய்யப்படுவதால் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள பம்பு உற்பத்தியை பாதித்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் பம்புகளின் விலையை 10-15% உயர்த்துவதாக தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில், குஜராத், அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவு என்பதால் அங்கு நிலவ கூடிய சாதகமான சூழ்நிலை இங்கு விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என்றார்.
சீனாவில் இருந்து குறைந்த விலை பம்புகள் இறக்குமதி செய்யப்படுவதும் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்றார். 6 மாத காலமாக மூலப் பொருட்களின் விலை உயர்வும் அதிகமாக உள்ளது என்றார். இதனால் நாளை ஜனவரி 1 முதல் பம்ப் விலையை 10-15% உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

