கோவை: 2026 புத்தாண்டை முன்னிட்டு கோவையில் கோவில்களிலும் தேவாலயங்களிலும் காலை நேர சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு துவங்கியுள்ளதை முன்னிட்டு அதிகாலை முதலே அனைத்து கோவில்களிலும் தேவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
கோவையிலும் அனைத்து கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முந்தி விநாயகருக்கு நல்லெண்ணெய் காப்பு சாத்தி, அருகம்புல் மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காலை முதலே தொடர்ச்சியாக பொதுமக்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சபரிமலைக்கு செல்லக்கூடிய ஐயப்ப பக்தர்களும் இக்கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சபரிமலைக்கு புறப்பட்டனர்.
அதேபோன்று புலியகுளம் பகுதியில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திலும் CSI தேவாலயத்திலும் புத்தாண்டை முன்னிட்டு காலை நேர சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இதே போன்று கோவையில் ஈச்சனாரி விநாயகர் கோவில், மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் என அனைத்து கோவில்களிலும் காலை முதல் மக்கள் புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

