கோவை மாநகரில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்

கோவை: கோவை மாநகரில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடப்பட்டதையொட்டி பொதுமக்கள் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டியது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், போலீசாரின் சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இரவு 10 மணிக்கு மேல் கோவை மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்புப் பணிகளில் மாநகரில் 1,500 போலீசாரும், புறநகரில் 1200 போலீசாரும் ஈடுபட்டு இருந்தனர். அதேபோன்று கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் எல்லைகளிலும் இரவு முதல் அதிகாலை வரை பாதுகாப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதேபோன்று வருடந்தோறும் போலீசார் சார்பில் புத்தாண்டு அன்று இரவு முகாம்கள் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டும் கோவையில் உக்கடம், வடகோவை, லட்சுமி மில் சிக்னல் சந்திப்பு, காந்திபுரம் உள்பட பல்வேறு இடங்களில் முகாம் அமைக்கப்பட்டது.

இந்த முகாம்களில் சட்டம் – ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விடிய விடிய பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது தேவையின்றி உலா வந்தவர்களையும், பைக்குகளில் சாகசங்களில் ஈடுபட்டவர்கள், மதுபோதையில் வந்தவர்களையும் பிடித்து முகாமில் அமர வைத்தனர். பின்னர் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதேபோல பல்வேறு இடங்களில் போலீசார் நின்று வாகன ஓட்டிகளை பத்திரமாக செல்லும்படி அறிவுரை கூறி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,

“கோவையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டியது. போலீசார் விபத்தில்லாத புத்தாண்டை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இந்த ஆண்டும் போலீசாரின் நடவடிக்கையால் விபத்துக்கள் தவிற்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் விபத்தில்லா புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அதேபோல தகராறு, அடிதடி போன்ற எந்த பிரச்னைகளும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.” என்றனர்.

Recent News

Video

Join WhatsApp