கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி இன்று துவங்கியது.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், கல்வி அறிவை மேம்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழக நூலகத்திற்காகப் புத்தகப் பரிந்துரைகளைப் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூலகத்தில் இன்று ‘புத்தகக் கண்காட்சி 2026’ தொடங்கப்பட்டது.
புத்தகக் கண்காட்சிக்குத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மற்றும் பொறுப்புப் பதிவாளருமான டாக்டர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அவர் அறிவுசார் வளர்ச்சியை வடிவமைப்பதில் புத்தகங்கள் மற்றும் நூலகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இதில் மாணவர் நல மையத்தின் தலைவர் டாக்டர் ராமலிங்கம், மாணவர்கள் பரந்த அளவிலான கல்வி அறிவியல் மற்றும் பொதுப் பதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இது போன்ற கண்காட்சியை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவம் குறித்துக் கூட்டத்தில் விளக்கினார்.
மாணவர்களின் பாடத்திட்டம் மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்காக/ விவசாயம் மற்றும் அது தொடர்பான பாடங்கள் குறித்த புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களின் ஒரு பெரிய தொகுப்பு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி நாளையும் பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நடைபெறும். மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகங்களுக்கு தள்ளுபடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

