கோவை: கோவை மாநகரில் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் ரூ.87.16 கோடி மோசடி நடந்துள்ளது. அதில் ரூ. 8.50 கோடி முடக்கப்பட்டும், ரூ. 7.65 கோடி மீட்கப்பட்டும் உள்ளது.
நாடு முழுவதம் சைபர் கிரைம் மோசடியால் அதிகளவில் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் பணத்தை இழக்காமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் நாளுக்கு நாள் பொதுமக்கள் பணத்தை இழந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இவ்வாறு கோவை மாநகரில் மட்டும் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் ரூ.87 கோடியே 16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 8 கோடியே 50 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியே 65 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
ஆன்லைன் மோசடி வருடம்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் விதவிதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டதால் அதில் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. லோன் ஆப் வாயிலாக பணத்தை இழந்து வந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
ஆனாலும் கொரியரில் போதை பொருள் வந்திருப்பதாக கூறி பணம் மோசடி, டிஜிட்டல் அரஸ்ட், டிரேடிங், ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆன்லைன் மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதேபோல பொதுமக்கள் மொபைல் போன்களில் வரும் ஏ.பி.கே., (ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜ்) பதிவிறக்கமோ, லிங்கை திறந்தோ பார்க்க கூடாது. அதன் மூலம் மொபைல் போனில் உள்ள தகவல்கள் திருட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் மோசடியில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் பணத்தை இழந்துள்ளனர். ஆன்லைன் மோசடி குறித்து தெரிந்தவர்களும் பணத்தை இழப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.
இவ்வாறு கோவை மாநகரில் கடந்தாண்டு 9960 பேர் புகார் அளித்துள்ளனர். இதில் பணத்தை பறிகொடுத்ததாக 7779 பேர் புகார் அளித்துள்ளனர். பணம் சாராத சைபர் கிரைம் குற்றங்கள், அதாவது படங்களை மார்பிங் போன்ற புகார்கள் 2181 பேர் அளித்துள்ளனர். இந்த புகார்களில் கடந்தாண்டு 289 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணத்தை பொருத்தவரை கடந்தாண்டு ரூ. 87 கோடியே 16 லட்சத்து 54 ஆயிரத்து 811 இழந்து உள்ளனர். அதில் ரூ. 8 கோடியே 50 லட்சத்து 72 ஆயிரத்து 836 முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட பணத்தில் இருந்து ரூ. 7 கோடியே 65 லட்சத்து 63 ஆயிரத்து 114 பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டவர்களில் கடந்தாண்டு 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.


எத்தனைவாட்டி ஏமார்ந்தாலும், மோசடி வலையில் மக்கள் விழுவது தொடர்கதையாகி உள்ளது
Namala Thirunthamal Ithai Olika Mudiyathu….