கோவை: கோவையில் 336.68 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில் அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல்வர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் தொகுப்புகள் வழங்கப்படும். அதற்கான டோக்கன்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவையில் 11 லட்சத்து 22 ஆயிரத்து 290 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 1540 நியாய விலை கடைகளில் 336.68 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இன்று துவங்கி 14ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவதாக கோவை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, விலையில்லா வேட்டி சேலை மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது.


