கோவை: கோவையில் சின்னியம்பாளையம் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
1946 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி அன்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்து கோவை சிறையில் தூக்கிலிடப்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் சின்னையன், வெங்கடாசலம், ரங்கண்ணன், ராமையன் ஆகிய நான்கு பேரின் நினைவு நாளை சின்னியம்பாளையம் தியாகிகள் தினமாக வருடம் தோறும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தன்று பேரணி மேற்கொண்டு தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு சின்னியம்பாளையம் தியாகிகள் தினமான இன்று ஆசிரியர் காலனியில் இருந்து பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் CPI மாநில செயலாளர் வீரபாண்டியன், CITU மாநில செயலாளர் கண்ணன் உட்பட கோவை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், பல்வேறு தொழில்சங்கத்தினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியவாறு 2 கிமீ பேரணி மேற்கொண்டனர்.
பின்னர் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடத்தில் கொடி ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சல் செலுத்தினர்.
தியாகிகள் நினைவிடத்தில் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்ட தூக்கு மேடையின் மாதிரி வைக்கப்பட்டிருந்தது.

