2026ல் இரட்டை இலக்கத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள்- கோவையில் பேட்டியளித்த நயினார் நம்பிக்கை…

கோவை: பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நைனார் நாகேந்திரன், முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பெருவாரியான இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதாக கூறினார். முகமது கஜினி 17 முறை படையெடுத்து கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்தார்.

வரக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டதாக கூறிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் அமைச்சர்கள் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகளே பதில் அளிக்கும் என்றார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும் என நம்பிக்கை தெரிவித்த நைனார் நாகேந்திரன், எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.

தேமுதிகவுடன் இதுவரை எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், கூட்டணியில் இருந்து அனைவரும் விலகி வருகிறார்கள் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தற்போது அனைவரும் கூட்டணிக்குள் வந்து கொண்டிருப்பதாகவும், முதலாவதாக அன்புமணி ராமதாஸ் இணைந்துள்ளதாகவும் கூறினார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீ பரவட்டும்’ என்ற வசனத்தை நீக்குவது தொடர்பான சென்சார் முடிவு குறித்து கருத்து தெரிவித்த நைனார் நாகேந்திரன், அண்ணாவின் வசனங்கள் நீக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை என்றும் கூறினார்.

பாஜக கொங்கு மண்டலத்தை மட்டும் குறிவைக்கவில்லை; தமிழகத்தையே இலக்காக கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp