கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை இந்த வாரம் 15ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்களின் கரகாட்டம், சிலம்பம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், பறையிசை, ஜமாப், ஜிக்காட்டம் ஆகியவை இடம்பெற்றன. இதில் துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஜமாப் மற்றும் ஜிக்காட்டத்திற்கு நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

