கோவை: மருதமலை அடிவார பேருந்து நிறுத்தம் பகுதியில் சுற்றி திரிந்த யானையை வனத்துறையினர் விரட்டினர்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானையால் பெரும் பரபரப்பு நிலவியது.
மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை பகுதியில் இக்கோவில் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகளவு காணப்படும். இது பக்தர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கிய ஒற்றை காட்டு யானை, திடீரென மருதமலை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்ததைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த அபாய ஒலியை (Siren) எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது.

