கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர் காவல்துறையினரை நகர்ந்து செல்லுங்கள் என்று சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி கோவையை சேர்ந்த முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு சத்தமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(70). இவருக்கு குன்னத்தூர் கிராமத்திலும் கொண்டையம்பாளையம் கிராமத்திலும் விவசாய நிலங்கள் இருப்பதாகவும் இரண்டு நிலங்களும் தனி நபர் ஒருவரால் போலி கிரயம் செய்யப்பட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல்துறையினர் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி வலியுறுத்திய பொழுதிலும் அவர் எழுந்திருக்காமல் இருந்ததால் காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக எழ செய்தனர். இருப்பினும் அவர் வர மறுத்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் காவல்துறையினர் தன்னை தொடக்கூடாது உடனடியாக அங்கிருந்து நகர்ந்து செல்ல வேண்டும் என சத்தமிட்டார். பின்னர் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

