கோவை: ஓய்வூதிய சங்கத்தை பதிவு செய்த தரவில்லை என்று கூறி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் “அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம்- கோவை மாவட்டம்” என்ற பெயரில் சங்கம் துவங்குவதற்கு ஆன்லைன் மூலம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கோவை வடக்கு பதிவாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது வரை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளாமலும் சங்கத்தை பதிவு செய்யாமலும் இருப்பதாகவும் இது குறித்து கேட்டால் ஏதேதோ காரணங்களை கூறி தேவையில்லாத ஆவணங்களை எல்லாம் கேட்பதாக பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து உடனடியாக தங்கள் சங்கத்தை பதிவு செய்து தர வேண்டும் எனவும் காலம் தாழ்த்துவதை கண்டிப்பதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய கோவை மாவட்ட பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், ஓய்வூதியர்களின் நலனுக்காக சங்கம் அமைப்பதற்கு அனைவரது கையொப்பத்துடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்ததாகவும், பதிவு செய்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் ஏதேதோ காரணத்தை கூறி அதனை திருப்பி அனுப்புவதாக தெரிவித்தார்.
மேலும் சம்பந்தமே இல்லாமல் போக்குவரத்து கழகத்திடமிருந்து NOC வேண்டுமென்று கேட்பதாகவும் இதற்கு முன்பு 27 சங்கங்கள் தமிழ்நாட்டில் நாங்கள் பதிவு செய்துள்ள நிலையில் அப்பொழுதெல்லாம் இது போன்ற நடைமுறை இல்லை ஆனால் தற்பொழுது வேண்டுமென்றே தங்களை அலைக்கழிப்பதாக தெரிவித்தார்.
இதற்கு முன்பு பதிவு செய்யும்பொழுது ஏழு பேர் மட்டுமே ஆதாரங்களை கொடுத்து சங்கத்தை பதிவு செய்த நிலையில் தற்பொழுது அனைவரது ஆதாரங்களையும் விவரங்களையும் பதிவாளர் கேட்பதாகவும் ஒரு சங்கத்தை பதிவு செய்வதற்கு ஏழு பேர் இருந்தால் போதும் என்று சட்டம் இருக்கக் கூடிய சூழலில் வேண்டுமென்றே இங்கு இழுத்தடிப்பதாக தெரிவித்தார்.
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் கூட பதிவு செய்ததாகவும் அங்கு கூட இது போன்ற நடைமுறை இல்லை ஆனால் இங்கு மட்டும் புதிதாக ஏதேதோ நடைமுறைகளை இவர்கள் கூறுவதாக தெரிவித்தார்.
காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் தங்கள் சங்கத்தை பதிவு செய்து கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

