கோவை: கோவையில் கடை மூடிய பிறகு ஆம்லெட் கேட்டு தகராறில் ஈடுபட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பீளமேடு விமான நிலையம் அருகே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ(32) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அவர் ஓட்டலை மூடி விட்டு நின்றிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த நபர் ஒருவர் ஆம்லெட் போட்டு தருமாறு கேட்டார்.
அதற்கு இளங்கோ ஓட்டலை மூடியாச்சு, ஆம்லெட் போட முடியாது என தெரிவித்தார். இதற்கு அந்த ஆசாமி ஆம்லெட் போட்டு தந்தே ஆக வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் இளங்கோவை தாக்கியதோடு, ஓட்டலில் இருந்த டேபிளை அடித்து உடைத்து சூறையாடினார்.
பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்று விட்டார். இது குறித்து இளங்கோ பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஓட்டலில் தகராறில் ஈடுபட்டது கோவை விமான நிலையம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்த கண்ணன்(23) என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

