கோவை: பொங்கல் தொடர் விடுமுறையில் 1 லட்சம் பார்வையாளர்கள் செம்மொழி பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
கோவை செம்மொழி பூங்காவுக்கு பொங்கல் விடுமுறையில் ஒரு லட்சம் பேர் வருகை என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தb பூங்காவினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2025 நவம்பர் 25-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அன்று முதல் நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களும் இப்பூங்காவை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த கோவை செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், இலவு, மிளகு மரம், திருவோட்டு மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் மற்றும் செடிகளைக் கொண்ட செம்மொழி வனம், நறுமண வனம், ஐந்திணை வனம், 1000-த்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளைக் கொண்ட ரோஜா தோட்டம் என 38.69 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோட்டங்களில் உள்ள மரம் மற்றும் செடி வகைகளைப் பற்றி பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் QR CODE வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பண்பாட்டின் அடையாளமாக கடையேழு வள்ளல்களின் கற்சிலைகள், தாவரவியல் அருங்காட்சியகம், 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம் மற்றும் உயர்தர உடற்பயிற்சி கூடம் போன்ற சிறப்பம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை நாட்கள், பல்வேறு பண்டிகை தினங்களில் அதிகப்படியான கூட்டம் வருகை புரிகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்ததாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

