கோவை: மாணவர்கள் தங்களை மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநர் எம். கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாறிவரும் உலகளாவிய வேலைவாய்ப்புச் சூழலில் மாணவர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது என கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநர் எம். கருணாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ”தனியார் வேலை வாய்ப்பு முகாம் நவ இந்தியா, பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ் என் ஆர் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இதில் வழங்கப்பட்டன.
இதில் எஸ் என் ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு எஸ் நரேந்திரன் தலைமை உரை ஆற்றும் போது மாறிவரும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் தொழிற்சூழலுக்கும் ஏற்றவாறு புதிய திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநர் கருணாகரன் மாறிவரும் உலகளாவிய வேலைவாய்ப்புச் சூழலில் மாணவர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது என்றார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, எதிர்காலத்தில் சுமார் 1.10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதே நேரத்தில் 90 லட்சம் வேலைகள் முற்றிலும் மாறும் என கூறிய அவர் மேலும் 50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி மறைந்து போகும் என்றார்.
வங்கிப் பணிகள், கற்பித்தல் உள்ளிட்ட பல துறைகள் ஏற்கனவே டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் முறைகளுக்கு மாறிவிட்டன என்றும் இதுவே வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் தெளிவான அடையாளம் என்றார். மேலும் ஒரே நிறுவனத்தில் சேர்ந்து நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வு பெறும் காலம் முடிந்துவிட்டது.
இனி ஒருவர் தன் தொழில் வாழ்க்கையில் சராசரியாக 8 முதல் 10 வேலைகள் வரை மாற்ற வேண்டியிருக்கும், என்றும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவையே வேலைவாய்ப்புச் சந்தையில் இந்த அதிரடி மாற்றங்களுக்கு முக்கிய காரணிகள்ப்என்றார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக (நான் முதல்வன்), நிரல் மேலாளர், கனிமொழி உரையாற்றுகையில் தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டம், பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு உட்பிரிவுகள் செயல்பட்டு வருவதாக விளக்கிய அவர், ‘கல்லூரி கனவு’ திட்டத்தின் மூலம் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்தக் கல்லூரி, எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் ஏப்ரல், மே மாதங்களில் மாவட்ட அளவில் வழங்கப்படுவதாக கூறினார்.
மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில், மைக்ரோசாப்ட், கூகுள், இன்போசிஸ், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும், பொதுவாக ரூ.20,000 வரை செலவாகும் இச்சான்றிதழ் படிப்புகளை அரசே கட்டணம் செலுத்தி இலவசமாக வழங்குவதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் இறுதி நோக்கம் என்றும், மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் நம்பாமல் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொண்டால்தான் சிறந்த வேலைவாய்ப்பை பெற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை, இயக்குனர், முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சிறப்புரையாற்றுகையில் மாணவர்கள் வெற்றிக்காக திறனும் மனநிலையும் அவசியம் என வலியுறுத்தினார். இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
ஜப்பானிய ‘இக்கிகாய்’ தத்துவத்தை விளக்கிய அவர், “உங்களுக்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வேலையைப் பிடித்த வேலையாக மாற்றிக் கொண்டால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும், என்றார். ஒரு நிறுவனம் நமக்கு ஊதியம் தருகிறது என்றால், அதன் தேவையை நாம் பூர்த்தி செய்கிறோம் என்பதுதான் உண்மை. வாடிக்கையாளர்கள் தரம், குறைந்த விலை, நேர்த்தியான உற்பத்தியை எதிர்பார்க்கிறார்கள், என்றும் கூறினார்.
வாழ்க்கையில் முன்னேற ‘5 Cs’ அவசியம் எனக் குறிப்பிட்ட கவிதாசன், “படைப்பாற்றல், அர்ப்பணிப்பு, திறன், துணிச்சல், ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருந்தால்தான் ஒருவர் உயரம் எட்ட முடியும்,” என்றார்.

