கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையின் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுவது போலவே, மருதமலையிலும் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், தைப்பூசத் திருவிழா 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான வைபவங்கள் மருதமலையில் இன்று முதலே தொடங்குகின்றன. இன்று மாலை 5 மணிக்கு மருதமலையில் விநாயகர் பூஜை வாஸ்து சாந்தி நடைபெற உள்ளது.
கொடியேற்றம்
மருதமலையில் நாளை காலை 6:30க்கு மேல், 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது.
பிப்ரவரி 1ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் திருத்தேர் இழுக்கப்பட்டு முருகன் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. மறுநாள் மாலை 4:30 மணியில் இருந்து 7:30 மணி வரை தெப்பத் திருவிழாவும், பிப்., 3ம் தேதி மாலை 4:30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்வும் நடைபெறுகிறது.
4ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக கோவை மட்டுமல்லாது அண்டை மாவட்ட மக்களும், கேரள மாநில மக்களும் திரளாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
பக்தர்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு ஜன., 30ம் தேதி முதல் பிப்., 2ம் தேதி வரை மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நாட்களில் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் படிக்கட்டு வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

