ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை கொடிசியா வளாகத்தில் முதலாவது ஐவுளி மாநாடு 360 என்ற தலைப்பில்
இரண்டு நாட்கள் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் காந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் முன்னிலையில் 915 கோடி மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும் சிறந்த ஏற்றுமதிக்காக முதலிடம் பெற்ற 5 நிறுவனங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டன.மேலும் விசைத்தறிகளை நவீனப்படுத்த 67.49 லட்சம் ரூபாய் மானியம், புதிய துணி நூல் பதனிடும் ஆலை துவக்க மூலதன முதலீட்டு மானியம் 10.92 கோடி ரூபாய் வழங்குவதற்கான ஆணை ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக மாநில அரசின் பங்குத்தொகையாக 1.30 கோடி மானியம் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப ஜவுளி அதுமட்டுமின்றி செயற்கை இழைகள் தொடர்பான 6 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மானியமாக 138.32 லட்சம் ரூபாய்க்கான ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியல் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஜவுளித்துறை மையமாக விளங்கி வருவதாகவும் 30 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 42 % பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் திராவிட மாடல் அரசு ஜவுளித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.

1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு ஜவுளித்துறை பங்களிப்பு வழங்கும் என நம்புவதாகவும், தமிழ்நாடு அரசின் ஆதரவு ஜவுளித்துறைக்கு எப்போதும் உண்டு என்றார். தமிழ்நாடு அரசு 6 சதவீத மானியத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தும் என உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோ மொபைல், ஐடி மற்றும் காலணி உற்பத்தி போன்ற துறைகளைப் போலவே ஜவுளித்துறையும் அசுர வளர்ச்சி கண்டுள்ளதாகக் தெரிவித்தார். ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகத் தமிழ்நாடு பெருமை பெற்றுள்ளதாகவும் நாட்டின் ஜவுளி வணிகத்தில் மாநிலத்தின் பங்கு 33 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய சந்தைகளைக் கண்டறிவது மற்றும் பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ள சூழலில், இந்த மாநாடு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2025-2026 வெளியிடப்பட்டது. அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பின்னர் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியினை கண்டு களித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp