கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
அந்த தனியார் வணிக வளாகத்தில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடையில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடையில் இருந்த மின்னணுப் பொருட்களில் தீப்பற்றி, அடுத்த சில நிமிடங்களில் கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
சுமார் பத்து அடி உயரத்திற்கும் மேலாக தீ எழும்பிய நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகைமண்டலமாகக் காட்சியளித்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீச்சி அடித்துச் சுமார் ஒரு மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து காரணமாகத் திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

