கோவை: சாலை விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு முதியவர் ஒருவர், 20 கிலோ எடையுடன் அரைபெடல் அடித்தபடி 40 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
கோவை சிறுமுகைச் சேர்ந்தவர் அறிவழகன். 57 வயதான இவர் கோவையில் அரசுப் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே தடகள வீரராக பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ளார்.
இந்த நிலையில், 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம், கோவை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறையுடன் இணைந்து சைக்கிளில் புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
இதில் சாதாரண சைக்கிள் ஒன்றின் மூலம் 20 கிலோ எடையை சுமந்துகொண்டு, என்.டபிள்யூ.ஆர். விதிப்படி தொடர்ந்து இடைவிடாமல் அரைபெடல் முறையில் பயணம் மேற்கொண்டார்.
புதிய சாதனை

மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய இவரது சைக்கிள் பயணம் 40 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து சாதனை பயணத்தை நிறைவு செய்த அறிவழகனுக்கு நோபல் புக் ஆப் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் மெடல்களை, அந்த அமைப்பின் பதிப்பு ஆசிரியர் தியாகு நாகராஜன், இயக்குநர் ஹேமலதா மற்றும் நரேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இவர் ஏற்கனவே சாதாரண சைக்கிளில் ஹேண்டில் பாரை குறுக்காக வைத்துக்கொண்டு 105 கிலோமீட்டர் ஓட்டியும், 40 கிலோ எடையுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து தாராபுரம் வரையிலான 110 கிலோமீட்டர் தொலைவை 11 மணி நேரத்தில் கடந்தும், அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை சாதாரண சைக்கிளில் சிலம்பம் சுற்றிக்கொண்டு ஓட்டியும், மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சேலம் வரை நடை பயணமாக 49 ஆயிரம் விதை பந்துகளை விதைத்தும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

