கோவை: கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக பா.ஜ.க நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து, சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் அறிவித்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து கோவை, மாநகர் மாவட்டத்தில் பா.ஜ.க.,வினர் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதி இன்றி தடையை மீறி போராட்டம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து காட்டூர், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், செல்வபுரம், உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டத்தில் 45 பெண்கள் உள்பட 332 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட என்.எஸ்.கே. சாலையில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. ஆலய ஆன்மீக மேம்பாட்டுப் பிரிவு மண்டல தலைவர் துரை, துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் தமிழக அரசை அவதூறாக விமர்சித்து கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து செல்வபுரம் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசுதல், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.