கோவை: IPL 2025 கிரிக்கெட் போட்டியை ரசிகர்களோடு ரசிகர்களாக மைதானத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் ஐ.பி.எல் பேன் பார்க் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் IPL 2025 போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, நாளை சென்னை-மும்பை மற்றும் ராஜஸ்தான்-ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் ஐ.பி.எல் நிர்வாகம் போட்டிகளை ஐ.பி.எல் ஃபேன் பார்க்கில் ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 23 மாநிலங்களில், 50 நகரங்களில் கிரிக்கெட் போட்டி வார இறுதி நாட்களில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
IPL Fan park 2025
கோவையில் ஐ.பி.எல் ஃபேன் பார்க் ஹிந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய திரையில் கிரிக்கெட் போட்டி நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து போட்டியைக் காணும் உணர்வை மக்களுக்கு கொடுக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் கல்லூரியில் இன்று மாலை 5 மணியிலிருந்து ஐ.பி.எல் போட்டியின் தொடக்க விழா நிகழ்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டி நேரலை செய்யப்படுகிறது.
மேலும், நாளை மதியம் 2 மணியிலிருந்து கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மக்களைக் கவரும் விதமாக இந்த இடங்களில் பல்வேறு கேளிக்கை அம்சங்களும் இடம்பெறுகின்றன.
இந்த மைதானத்தில் அமர்ந்து நேரலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.