Header Top Ad
Header Top Ad

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுக்கு கோவை சி.பி.சி.ஐ.டி சம்மன்!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனை வருகிற 27ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா கோடநாடு பகுதியில் உள்ளது.

இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் உள்ளே நுழைந்தது. அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இது தொடர்பாக சோலூர் மட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே கொள்ளை கும்பலை சேர்ந்த சேலம் ஆத்தூர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Advertisement

மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ. ஆறுகுட்டி உட்பட இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுதாகரன்

இந்நிலையில், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் குற்றவாளிகள் மற்றும் பல்வேறு சாட்சிகளிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி்ன்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஏ.டி.எஸ்.பி-க்கள் வீரபெருமாள் மற்றும் பெருமாள்சாமி ஆகியோரிடம் கடந்த வாரம் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

அவர்கள் அளித்த தகவலின்படி பலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதில், வருகிற 27ம் தேதி (வியாழக்கிழமை) கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News