ஒதுக்கீடு செய்யாத வீடு எதற்கு? கோவையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மக்கள்!

கோவை: கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைத்தும், உக்கடம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்யாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

உக்கடம் சி.எம்.சி காலனி மற்றும் வெரைட்டி ஹால் ரோடு பகுதிகளில் 952 தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதாகக்கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வீடுகளை காலி செய்தது மாநகராட்சி.

தொடர்ந்து, 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புல்லுகாடு அருகே தற்காலிக தகரக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த மக்களுக்காக முதற்கட்டமாக உக்கடத்தில் 222 வீடுகளும், வெரைட்டி ஹால் சாலையில் 192 வீடுகளும் கட்டப்பட்டன. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்த அக்டோபரில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

ஆனால், தற்போது வரை வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் செய்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, தகரக் கொட்டகையில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள், சி.எம்.சி காலனி அடுக்குமாடிக் குடியிருப்பு முன்பு போராட்டம் மேற்கொண்டனர்.

திடீரென, “ஸ்டாலின் தான் வராரு… வீடு திறக்க போறாரு…” என்று கேலி செய்தவாறு,ஆளுக்கு ஒரு வீட்டின் பூட்டை கல்லால் அடித்துத் திறந்து உள்ளே புகுந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களை வெளியேற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp