கோவை மாணவர்களே… கல்லூரியில் பயில கல்வி உதவி தேவையா?

கோவை: பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் பொறியியல் உயர்கல்விக்கு ‘கேட்டலிஸ்ட்’ கல்வி உதவி திட்டத்தை கோவையைச் சேர்ந எல்.ஜி எக்யூப்மென்ட்ஸ் மற்றும் அம்ரிதா பல்கலைக்கழகம் இணைந்து அறிவித்துள்ளன.

கோவையை தலைமையிடமாக கொண்டு ஏர் கம்ப்ரெஸ்ஸர் துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது எல்.ஜி எக்கியூப்மென்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனமும் கோவை அம்ரிதா விஷ்வ வித்யபீடம் பல்கலைக்கழகமும் இணைந்து, பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு சிறகுகள் தர ‘கேட்டலிஸ்ட்’ எனும் உதவி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

இந்த திட்டம் மூலம் வரும் 2025-26 கல்வி ஆண்டிலேயே 20 திறமையான மாணவ மாணவிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்ட படிப்பை வழங்க உள்ளனர். மேலும் வேலைவாய்ப்பும் கிடைக்க இந்த திட்டம் வழிசெய்துள்ளது.

இதுகுறித்து எல்.ஜி எக்கியூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில்:-

தரமான கல்வி என்பது மிகச் சிறந்த, அர்த்தமுள்ள மாற்றத்தை அதை கற்பவர்கள் மீது மட்டுமல்லாது அவர்கள் அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் மீதும் ஏற்படுத்தும் என்பதை எல்.ஜி எக்கியூப்மென்ட்ஸில் நாங்கள் அனைவரும் முழுமனதுடன் நம்புகிறோம்.

அம்ரிதா-வுடன் நாங்கள் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள இந்த உதவித்திட்டமென்பது பொருளாதார அளவில் உதவியை வழங்குவதை தாண்டி, நல்வாய்ப்புகளை உருவாக்கி தந்து, திறமைசாலிகளை ஊக்குவித்து,எதிர்கால பொறியாளர்களான அவர்களுக்கு தேவையான திறன்களை வழங்கி அவர்களை படைப்பாளிகளாகவும், பிறரை வழிநடத்தக் கூடியவர்களாகவும் உருவாக்கவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டது.

தகுதியான மாணவர்களுக்கு உலக தரமான கல்வியும், வெற்றிக்கான வழியையும் அடையவேண்டும் என்ற எங்களின் குறிக்கோளை உறுதிப்படுத்தும் படி இந்த திட்டம் உள்ளது. இதில் நாங்கள் அம்ரிதா விஷ்வ வித்யபீடத்துடன் இனைந்து பயணிப்பதில் பெருமை படுகிறோம். என்றார்.

இதுகுறித்து அம்ரிதா விஷ்வ வித்யபீடத்தின் கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை உறவுகள் பிரிவின் முதன்மை இயக்குனர் பேராசிரியர் பரமேஸ்வரன் பேசுகையில்:

இந்த திட்டம் மூலம் தேர்வாகும் 20 மாணவர்களுக்கு வெறும் தரமான கல்வி கிடைப்பதுடன், தொழில்துறை அனுபவம் மற்றும் உறுதியான வேலைவாய்ப்பும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

கல்வி துறை மற்றும் தொழில்துறை கூட்டமைத்தால் எப்படிப்பட்ட நல்ல மாற்றங்களை அடுத்த தலைமுறையினர் மீது ஏற்படுத்த முடியும் என்பதற்கு சான்றாக அமையும். என்றார்.

தேர்வாகும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை எல்.ஜி எக்கியூப்மென்ட்ஸ் நிறுவனம் ஏற்கும். இதில் கல்லூரியில் தங்கும் கட்டணம், கல்விக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணம் ஆகியவையும் அடங்கும்.

பொறியியல் கோட்பாடுகளின் முக்கிய அம்சங்களுடன் வணிகத்தின் அடிப்படைகளை உள்ளடக்கியதாக இந்த திட்டம் இருக்கும் என்பதால் மாணவர்கள் முழுமையான பொறியியல் கல்வியையும் தொழில்துறை அனுபவத்தையும் பெற்றவர்களாக இருக்க முடியும்.

மாணவர்களுக்கு தொழில்துறை உலகில் நடைபெறும் பொறியியல் தொடர்பான திட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதுடன், எல்.ஜி நிறுவனத்தில் பயிற்சிகளும் பெற முடியும். இதனால் கல்வி கற்கும் காலத்திலேயே தொழித்துறை அனுபவத்தை பெற்றவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

தலைமை பண்புகள், புதுமைகளை படைக்கும் திறன் மற்றும் தனிப்பட்ட திறன்களை பெற இந்த திட்டம் வாய்ப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அனைத்து பட்டதாரிகளுக்கும் எல்ஜி எக்கியூப்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெறுவர்.

இந்த பலன்களை அடைய விரும்புபவர்கள், அம்ரிதா பொறியியல் நுழைவு தேர்வையும், எல்ஜி நிறுவனத்தின் தனிப்பட்ட நுழைவு மற்றும் திறனறி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

கோவையில் உள்ள அம்ரிதா பல்கலையில் பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயில விரும்பும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக இந்த உதவித்தொகை திட்டம் இருக்கும்.

இந்த உதவித்திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, https://www.elgi.com/in/catalyst/ இணையதளத்தை பார்க்கலாம். கல்வி உதவி தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News

Latest Articles