கோவை: கோவையில் பிரசித்திபெற்ற காரமடை அரங்கநாதர் கோவில் வரலாறு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கோவை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் காரமடை அரங்கநாதர் கோவிலும் ஒன்று.
காரமடை அரங்கநாதர்
கோவையிலிருந்து 28 கி.மீ., தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இத்தலத்தில் கருடாழ்வாரின் விருப்பத்திற்காக, கல்யாணக் கோலத்தில் காட்சியளித்த மகா விஷ்ணு, பிறகு இங்கேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியதாக நம்பப்படுகிறது.
வெட்டுக்காயம்

பசுமாடுகளை மேய்ச்சலில் விட்டிருந்த ஒருவர், புதர் அருகே காராம் பசு தானாகவே பால் சொரிந்ததைப் பார்த்தார். அதிர்ச்சியடைந்த அவர், புதரை அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது, அங்கிருந்து ரத்தம் வெளியேறியதால். அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதையறிந்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது, ஒருவருக்கு அருள் வந்து, சுயம்பு வடிவில் பெருமாள் காட்சியளிப்பதாகக் கூறினார்.
உடனே, அங்கிருந்தவர்கள் கல்லை சுத்தம் செய்த போது, அரங்கன் சுவாமி சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
உடனே பிரசாதங்களைப் படைத்து, ‘ரங்கா பராக்… கோவிந்தா பராக்’ என்று முழக்கமிட்டனர். இதையடுத்து, அந்த இடத்திலேயே பெருமாளுக்கு கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இன்றும் பெருமாளின் மீது வெட்டுக்காயம் காணப்படுகிறது, என்பது தல வரலாறு.
குழந்தை பாக்கியம்

அரங்கநாத சுவாமி சன்னிதானத்துக்கு வலது புறம் அரங்கநாயகி தாயார் சன்னிதியும், இடது புறம் ஆண்டாள் சன்னிதியும் உள்ளது. முன்புறம் கருடக் கம்பம் அமைந்துள்ளது.
பரவாசுதேவர் சன்னிதிக்கு அருகே 12 ஆழ்வார்களின் திருவுருவங்களும் சன்னிதிகள் அமைந்துள்ளன.
ஆண்டாள் சன்னிதிக்கு பக்கத்தில் வீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். கோவிலில் உள்ள காரை என்னும் மரம் தலவிருட்சமாக உள்ளது.
இம்மரத்தில் கயிறு கட்டினால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் வரும் என்பது முன்னோரின் நம்பிக்கையாகும்.
விஷேச நாட்கள்

விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் கொடிய நோயால் அவதிப்பட்டதாகவும், இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதால், அந்நோயிலிருந்து விடுபட்டதாகவும் வரலாறுகள் உண்டு.
மாசி மகம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி பவுர்ணமி போன்ற நாட்களில் இக்கோவிலுக்கு அதிக பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
காரமடை தேரோட்டம்
காரமடை அரங்கநாதர் கோவிலில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்வு தேரோட்டம். ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டம், பெட்டத்தம்மன் அழைப்பு, தண்ணீர் சேவை, பந்த சேவை உள்ளிட்ட விழாக்களைக் காண, கோவை மட்டுமல்லாது, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.

எப்படி செல்லலாம்?
காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டால், காரமடை அரங்கநாதர் கோவிலை 28 கி.மீ., பயணித்து அடைந்து விடலாம். உக்கடத்திலிருந்து 30 கி.மீ., தூரம் பயணிக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர், நரசிம்மநாயக்கன் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் வழியாகப் பயணித்து காரமடையை அடைந்து அங்கிருந்து கோவிலுக்குச் செல்லலாம்.
கோவை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டால், காளப்பட்டி, கோவில்பாளையம், குப்பேபாளையம் வழியாக 29 கி.மீ., பயணித்து கோவிலை அடையலாம்.
கோவிலுக்கு செல்லும் வழியைக் காட்டுகிறது மேப்: https://maps.app.goo.gl/BPrkGgjwxVfFYJdR8
காரமடை அரங்கநாதர் கோவில் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமுள்ள கோவை வாசிகளுக்கும், வெளியூர் மக்களுக்கும் இச்செய்தித் தொகுப்பை பகிரலாம்.