ஈஷா: பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சி நிறைவு!

கோவை: ஈஷா யோக மையத்தில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கான 5 நாட்கள் பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள் நிறைவு பெற்றது.

இந்திய பாதுகாப்பு படை வீரர்களை ஹத யோகா பயிற்றுநர்களாக உருவாக்கும் வகையில், ஈஷாவில் பாதுகாப்பு படைகளுக்கான பாரம்பரிய ஹத யோக பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு கடந்த 15 நாட்களாக ஹத யோகாவின் பிரிவுகளான உப யோகா, அங்கமர்தனா, சூர்ய க்ரியா ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற வீரர்கள் இதனைத் தொடர்ந்து கடற்படை முகாம்களில் உள்ள சக வீரர்களுக்கும் இந்த ஹத யோகா பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

இந்த பயிற்சியில் பங்கேற்ற இந்திய கடற்படை தளபதி வைபவ் கூறுகையில், “எனது அனுபவத்தில், பாதுகாப்பு படை பயிற்சிகளில், நாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் முதன்மையாக தசை வலிமையை வளர்ப்பது அல்லது நுரையீரல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இங்கு பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகளை செய்த பிறகு, யோகாவை வெறும் உடற்பயிற்சியாக கருதுவது தவறான புரிதல் என்பதை நான் உணர்ந்தேன்.

இந்த பயிற்சியின் மூலம் யோகா நம் உடல், மனம் மற்றும் ஆற்றலை எவ்வாறு பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைக்கிறது மற்றும் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை உயர்த்துகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.” என்றார்.

இது குறித்து சத்குரு கூறுகையில், “இந்திய பாதுகாப்புப் படைகளுக்கான பாரம்பரிய ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்த 72 இந்திய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் தேசத்திற்கு உயர்ந்த சேவையை வழங்கும்போது, உங்கள் உடலும் மனமும் நீங்கள் நினைக்கும் விதத்தில் செயல்படுவது மிக முக்கியம். ஹத யோகா, உங்களுக்கு எந்த சூழ்நிலையையும் சமநிலை மற்றும் தெளிவுடன் கடந்து செல்ல தேவையான வலிமையையும் உறுதியையும் அளிக்கும். உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி, வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள். எனக் கூறியுள்ளார்.

Recent News

Video

Join WhatsApp