காதலித்த கோவை அரசு கல்லூரி மாணவி ஆணவக்கொலை; கொடூர அண்னன் கைது!

கோவை: கோவை அரசு கல்லூரி மாணவியை ஆணவக்கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

பல்லடத்தை அடுத்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி-தங்கமணி தம்பதியின் மகள் வித்யா (வயது 22). கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெண்மணி என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வெண்மணி வித்யா வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் வித்யா அவரது குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று வீட்டில் தனியாக இருந்த வித்யா பீரோ விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்கள், உடனே வித்யாவின் உடலை அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர்.

வித்யா உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த காதலன் வெண்மணி இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து, புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை நேற்று தோண்டி எடுத்த போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்போது வித்யா தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அண்ணன் சரவணன் என்பவரே வித்யாவை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்ததால் அண்ணனே தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் கோவை-திருப்பூர் மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடுஞ்செயலில் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்து, கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வித்யாவின் நணபர்கள், ஊர் மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Recent News