World autism day: ஆட்டிசம் என்ற நரம்பு குறைபாடு பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி, உலக ஆட்டிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், நம் வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இச்செய்தி பதிவிடப்படுகிறது.
Autism
ஆட்டிசம் என்பது நரம்பு முறையில் ஏற்படும் ஒரு குறைபாடாகும். இதனை ஸ்பெக்ட்ரம் கோளாறு என்று அழைக்கின்றனர்.
ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்தை மற்றவருடன் தொடர்பு கொள்ளும் திறனை இழக்கிறது அல்லது மந்தமாக்குகிறது.
இந்த ஆட்டிசம் குறைபாடு குழந்தையின் 3 வயதுக்கு முன்பே ஏற்படுகிறது. இக்குறைபாடு ஒருவரது வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.
உலக அளவில் பாதிப்பு
Autism என்ற வார்த்தையில் உள்ள முதல் இரண்டு எழுத்துகள் ‘AU’ என்பது கிரேக்க மொழியில் “தனியாக இருப்பது” என்று பொருள்.

தங்களைச் சுற்றி பலர் இருந்தாலும், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணிப்பின்படி, 160 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது.
அறிகுறிகள்
மருத்துவ பரிசோதனைகளின் மூலம் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிக்கப்படும் அபாயத்தை ஒன்றரை வயதிலேயே கண்டறியலாம். குழந்தையின் மூன்று வயதுக்குள் ஆட்டிசத்தின் அறிகுறிகள் வெளிப்படும். இதைச் சரியான நேரத்தில் கவனித்து, மருத்துவர்களின் உதவியை பெறுவது மிகவும் முக்கியம்.
ஆட்டிசம் அறிகுறிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். பொதுவாக மூன்று மாதங்கள் கடந்த குழந்தை பெற்றோர் ஒரு பொருளைக் கவனித்துப் பார்க்கும். ஆனால்,ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்தைக்கு கவனிக்கும் திறன் குறைவாக இருக்கும்.
பல பெற்றோர் குழந்தை இதனைக் கவனிக்கவில்லை என்று நினைக்கின்றனர். ஆனால், இது ஆட்டிசத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஒரு வயதைக் கடந்த குழந்தைகள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கையை நீட்டி அடையாளம் காட்டுவார்கள், ஆனால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் அதனைச் செய்யமாட்டார்கள். பொதுவாக இத்தகைய குழந்தைகள் கண்களைப் பார்த்து யாரிடமும் தொடர்புகொள்ள மாட்டார்கள்.
இவர்கள் பேசுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்வார்கள். குழுவாக அல்லாமல், ஒரு பொம்மை அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மட்டுமே நாட்டத்தைச் செலுத்துவார்கள்.
வயதும் வித்தியாசமும்
ஒன்றரை வயதைக் கடந்த இயல்பான ஒரு குழந்தை தனக்கு வேண்டும் என்கிற பொருளை பெற்றோரிடம் சைகையில் காட்டும் போது, அதற்கு பெற்றோரின் ரியாக்ஷன் என்ன என்பதைக் கூட கவனிப்பார்கள். ஆட்டிசம் பாதித்த ஒன்றரை வயது குழந்தை, தனக்கு தேவையான பொருளை கேட்கும், ஆனால், பெற்றோரின் முக பாவனைகளை கவனிப்பதில்லை.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப பேசுவார்கள். இவையெல்லாம் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது என்பதற்கான அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
ஆட்டிசம் குறைபாட்டை சரியான நேரத்தில் அணுகி, உதவினால் அந்த குழந்தையை சமூகத்துடன் பொருந்தி வாழ வைக்க முடியும்.
ஆட்டிசத்துடன் புத்திசாலித்தை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம். ஏனென்றால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பலர் கணித மேதைகளாகவும், இசை மற்றும் கலை துறைகளில் அபார திறன் கொண்டவர்களாகவும், சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.
சரியான கவனிப்பு, மருத்துவம், கற்பித்தலை குழந்தைக்கு கொடுத்தால், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தலாம். அவர்களின் கற்பனை திறனை அதிகரிக்கலாம், மேலும் உலகத்துடன் சிறப்பாக தொடர்பு கொள்ள உதவலாம்.
ஆட்டிசம் குறைபாட்டை எவ்வளவு விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ அவ்வளவு விரைவில் குழந்தைகளின் திறனை மேம்படுத்திட முடியும்.

உதவலாம்
உலக ஆட்டிசம் தினமான இன்று இந்த குறைபாடு குறித்து அறிந்து கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்கள் குழந்தைகளிடம் மேற்கூறிய குறைபாடுகளை உங்களால் கண்டறிய முடிந்தால் உடனடியாக ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள்.