கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலும் ஒன்று. பொள்ளாச்சியில் இருந்த தென்மேற்கு பகுதியில் சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு
முந்தைய காலத்தில் ஆனைமலையை ஆண்ட மன்னன், தனக்கு சொந்தமான மாந்தோப்பில் பழங்களை பறித்து உண்பவர்களுக்கு கொடூரமான தண்டனைகளை கொடுத்து வந்தார்.
அவரது படைத் தளபதியான கோசரின் மகள் சயணி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, தோழிகளுடன் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, குளத்தில் மிதந்து வந்த மாம்பழத்தை, சயணி ஆசையாக எடுத்து சாப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை
இது மன்னனின் தோட்டத்துக்கு சொந்தமான மாம்பழம் என தெரிய வரவே, சயணிக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
இதையறிந்த சயணியின் கணவன் மகிழன், மன்னனிடம் சென்று மன்றாடியுள்ளார். எடைக்கு எடை தங்கமும், யானைகளை பரிசாக தருவதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த மன்னன், நிறைமாத கர்ப்பிணியான சயணிக்கு தூக்கு தண்டனை கொடுத்துள்ளார். பிறகு, மன்னனை கொன்று விட்டு, மகிழனும் உயிர் நீத்து விடுகிறார். இதையறிந்த கோசரும் ஈட்டியால் மார்பில் குத்தி உயிரிழந்தார்.
மசாணி அம்மன்
இந்த சம்பவம் நடந்த சில ஆண்டு காலம் ஊரில் மழை இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை கொடுத்ததால் தான் ஊரில் மழை இல்லை என்பதை உணர்ந்த மக்கள், சயணிக்கு சிலை எடுத்து பெண் தெய்வமாக வழிபட்டனர்.
இதை செய் உடனே ஊரில் மழை கொட்டி தீர்த்தது. அந்த தெய்வமே தற்போது மாசாணி அம்மனாக எழுந்தருளியுள்ளார்.

கடவுள்கள்
இந்தக் கோவிலின் பிரதான தெய்வமான மாசாணி அம்மன் சன்னதி இருக்கிறது. அதில், மாசாணி அம்மன் படுத்த வாக்கில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தலை முதல் பாதம் வரையில் 15 அடி நீளமுடையது. தெற்கே தலைவைத்து படுத்திருக்கும் அம்மனின் திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இந்தக் கோவிலில் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் சன்னதிகள் முக்கியமானவையாகும். நான்கு வாயில்களை கொண்டுள்ள இந்தக் கோவிலின் கருவறையின் கிழக்கு பக்கத்தில் அம்மன் சுயம்புவாக இருக்கிறார்.
மாசாணி அம்மன் கோவிலின் காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், கருப்பராயர், விநாயகர், மகிஷாசுவர்த்தினி, சப்தமாதாக்கள் ஆகியோர் உள்ளனர்.
நம்பிக்கை
மாசாணி அம்மன் வேண்டி சுற்றி வந்தால், தீராத நோயும் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
பிள்ளை பேறு இல்லாதவர்கள் அமமனை வேண்டினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல, நீண்ட கால கடன், செய்வினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மிளகாய் அரைத்து அம்மன் மீது பூசி வேண்டினால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

தங்களின் பிரச்னைகளை பேப்பரில் எழுதி, உப்பு சாற்றி வழிபாட்டால் நினைத்தது கைகூடுமாம்.
மாசாணி திருவிழா
மாசாணி அம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கும் விழா என்று அழைக்கப்படும் தீமிதித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
எப்படி செல்வது?
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, அம்பரம்பாளையம், ஆனைமலை மார்க்கமாக 55 கி.மீ பயணித்து மாசாணி அம்மன் கோவிலை அடையலாம்.
காந்திபுரத்தில் இருந்து 60 கி.மீ தூரம் பயணித்து இக்கோவிலை அடையாலாம்.