கோவை:தென்னாடுடைய சிவனே போற்றி” என்று போற்றப்படும் ஈசனின் தென் கயிலைதான் வெள்ளியங்கிரி மலை. இந்த கோவிலுக்கு சில வரலாறுகள் உண்டு.
சிவனையே மணப்பேன் என்று பிடிவாதத்துடன் இருந்த பெண், ஈசன் வரதாது போனால் உயிர் துறந்து விடுவேன் என்று கூறினாள்.
இதையறிந்து அந்தப் பெண்ணை தேடி ஈசன் தென்னிந்தியாவுக்கு வந்தார். ஆனால், சில சதித்திட்டங்களால், உரிய நேரத்தில் அந்தப் பெண்ணை ஈசனால் சந்திக்க முடியாமல் போனது. இதனால், ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண் நின்றபடியே உயிரை மாய்த்தார். இதுவே நாளடைவில் அதுவே கன்னிகோவிலாய் உருவெடுத்தது.
உரிய நேரத்தில் சென்று பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்ற விசனத்தில் தேடிச் சென்ற இடம் தான் வெள்ளியங்கிரி. ஆனந்தத்திலோ, தியானத்திற்காகவோ வராத ஈசன், மனச்சோர்வுக்காக வெள்ளியங்கிரி மலை மீது ஏறி அமர்ந்தார்.
வெள்ளியங்கிரி மலையின் 7வது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்து நின்ற சுயம்புலிங்கமாகும். பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் ஈசனை கும்பிடும் படியாக சிவகோஷத்தை எழுப்பியவாறு பக்தர்கள் மலையேறுவது வழக்கமாகும்.
முதல் மலை

முதல் மலை செங்குத்தான பாதையுடையது என்பதால், ஏறுவது மிகவும் சவாலானது. ஆரம்பத்தில் சிரரமாக இருந்தாலும், அதனை தாண்டி வருபவர்களை விநாயகப் பெருமான் வரவேற்பார்.
இரண்டாவது மலை
சுனையில் நீர் குடித்து விட்டு, 2வது மலையில் ஆனந்தமாக நடைபோடும் போது, எல்லையில் வழுக்குப்பாறை நிமிர்ந்து நிற்கிறது. இந்த வழுக்குப்பாறை வந்தாலே, 2வது மலை முடிந்து விட்டதாக அர்த்தம்.
மூன்றாவது மலை
கைதட்டிச்சுனை என்ற சுனையோடு 3வது மலை தொடங்கும். இந்தப் பகுதியில் சித்தர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள பாறைகளின் இடுக்கில் கைதாட்டினால், தண்ணீர் வரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே இந்த சுனையை கைதட்டி சுனை என்கின்றனர்.
நான்காம் மலை

பாம்பாட்டிச்சுனையோடு 3வது மலை முடிவுக்கு வரும். மருதமலையில் பிரபலமாக உள்ள பாம்பாட்டிச் சித்தர் இந்த இடத்திலும் வசித்திருப்பதாகக் கூடும் என்பதால், இந்தப் பெயர் பெற்றது. 4வது மலையில் சற்று சமதளமாக இருப்பதால், மலையேறி செல்பவர்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கும்.
மண் மலையான இந்த 4ம் மலையில் தான் ஒட்டர் என்னும் சித்தர் சமாதி அடைந்துள்ளார்.
ஐந்தாவது மலை
பீமன் களியுருண்டை மலை என்று அழைக்கப்படும் மலை தான் ஐந்தாம் மலையாகும். பஞ்ச பாண்டவர்கள் வெள்ளியங்கிரிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அர்ச்சுனன் தலைப் பாறை இருப்பதால், இங்கு அர்ச்சுனன் தவம் செய்ததாகக் கருதப்படுகிறது.
5 மற்றும் 6ம் மலைகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாய் இருக்கின்றன. இதற்கு நடுவே சேத்திழைக் குகை அமைந்துள்ளது.
ஆறாவது மலை
மற்ற மலைகளை ஒப்பிடும் போது இது வித்தியாசமானது. அதாவது, கீழ்நோக்கி இறங்கக் கூடிய மலையாகும். இங்கு பாயும் ஆண்டி சுனை, நீலி ஆற்றில் கலக்கிறது. 5 மற்றும் 6வது மலைகள் வெள்ளை மணல் கொண்டிருப்பதால், திருநீற்றுமலை என்றும் அழைக்கப்படுகிறது.
ஏழாம் மலை
முதல் மலையைப் போலவே சுவாமி முடிமலை என்னும் இந்த 7வது மலை சவால்மிக்கதாகும். இங்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக, தோரணம் போல அமைந்திருக்கும் பாறைகள் கண்களுக்கு விருந்தளிக்கும்.
இங்கு தான் சுயம்புவாக காட்சியளிக்கும் ஈசன் அருள்பாலிக்கிறார்.

தெய்வீக நூல்களின் கூற்றுப்படி, மலை அல்லது லிங்கத்தை வழிபடுபவர்கள், அறம், பொருள், வீடு மற்றும் இன்பம் ஆகிய நல்பலன்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
இறைமையின் மகத்துவம் மட்டுமல்லாமல், இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணரும் தலம் தான் வெள்ளியங்கிரி மலை. இங்கு பெண்கள், குழந்தைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி செல்வது?
கோவையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி இந்த வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. பூண்டி மலை அடிவாரம் வரையில் பேருந்து வசதியுண்டு.
சுவாசக்கோளாறு, இருதயக் கோளாறு உடையவர்கள் இந்த மலையேற்றத்தை தவர்க்க வேண்டும்.