கோவை: கோவையில் பைக் உரசிய விவகாரத்தில் ஏற்பட்ட பகையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குனியமுத்தூரை அடுத்த டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற இளைஞருக்கு கத்திக் குத்து விழுந்தது.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இக்கொலை வழக்கை விசாரித்த போலீசார் 4 பேரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது,
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாருதீன் குனியமுத்தூர் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, மற்றொரு பைக் மீது உரசி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அசாருதீன் மற்றும் எதிர் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பின்பு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சமரசத்திற்குச் சென்றது.
சம்பவம் குறித்து சி.எஸ்.ஆர்., பதிவு செய்த போலீசார் இருதரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே தான், நேற்றிரவு இருதரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியாக மாறி கொலை அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பாஸ், சம்சுதீன், ரபீக் ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.