கோவை: வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் கோவையில் வியாபாரிடம் ரவுடி என கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா (34). இவர், கோவை சித்தாப்புதூர் பகுதியில் தங்கிருந்து காந்திபுரத்தில் நட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராஜா வழக்கம் போல கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த 2 பேர் கடையில் இருந்த நட்ஸ் வகைகளை எடுத்து கொண்டு பணம் கொடுக்காமல் புறப்பட்டு சென்றனர்.
இதனைப்பார்த்த ராஜா அவர்களிடம் வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்டார். அதற்கு அந்த வாலிபர்கள் தாங்கள் கோவையில் மிக பெரிய ரவுடிகள் எங்களிடம் பணம் கேட்கிறாயா? என கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்த பணத்தைப் பறித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ராஜா காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ரவுடி என மிரட்டியது ரத்தினபுரியை சேர்ந்த நந்தகுமார் என்கிற பறவை நந்தகுமார் (24) மற்றும் இடிகரையை சேர்ந்த ஜெயபிரசாந்த் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நந்தகுமார் மற்றும் ஜெயபிரசாந்த் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.