கோவை: கோவையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, அடுத்த சில நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவை மாநகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமை வகித்தார். இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் வாகனங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அவற்றை அகற்றி சீரான நீரோட்டத்தை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், மோட்டார் பம்புகள், மரங்களை அகற்றுவதற்கான இயந்திரங்கள் உள்ளிட்ட தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து, பாதிப்பு ஏற்படும் இடங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அகற்றுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, கோவையில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகரின் மத்திய மண்டலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை, எஸ்.என்.ஆர். சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர்
கட்டாரவி தேஜாவும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.






