கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல், கோடை விடுமுறை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் டவுன்ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளர் அலமேலுமங்கை கூறியதாவது:-
கடந்தாண்டே கோடை விடுமுறை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், எங்களுக்குக் கோடை விடுமுறை வழங்கப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் பணியாளர்களுக்குக் கூட பணி நிரந்தரம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது அங்கன்வாடியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல் அதனை நிரப்ப வேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். கோவை மாவட்டத்தில் மட்டும் 1,656 அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இங்கேயே சமைத்து உண்ணும் போராட்டம்
இங்கேயே சமைத்து உண்ணும் போராட்டத்தையும் முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.