Header Top Ad
Header Top Ad

காய்கறி சாகுபடியை லாபகரமாக்குவது எப்படி? ஈஷா கருத்தரங்கில் விவசாயிகள் விளக்கம்!

கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய “தொடர் வருமானம் தரும் காய்கறி சாகுபடி” கருத்தரங்கம் பல்லடம் வனாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் பெருமளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் ஸ்கை சுந்தரராஜ், முன்னோடி இயற்கை விவசாயிகள் கேத்தனூர் பழனிசாமி, வாவிபாளையம் சுந்தரமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி
வைத்தனர்.

Advertisement
Lazy Placeholder

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றி பேசுகையில்,

“நமது வாழ்வியல் முறை மாறி வருகிறது. உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. நாம் மட்டுமன்றி, நமது வருங்கால சந்ததிகளும் ஆரோக்கியமாக வாழ, அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும்” என்றார்.

இந்தக் கருத்தரங்கில் பந்தல் காய்கறிகளில் ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இயற்கை முன்னோடி விவசாயி நாகலிங்கம் பேசுகையில்,

Advertisement
Lazy Placeholder

“2014 ஆம் ஆண்டு முதல் எனது 8 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில், நிலத்தை தயார் செய்வதற்காக மக்கிய தொழு உரம், உயிர் உரங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிலத்திற்கு அளித்தேன்.

Lazy Placeholder

அடுத்து இயற்கை விவசாயத்தில் முக்கியமானது விதை தேர்வு. நான் ஒரு ஏக்கரில் 10 ஆயிரம் விதைகளை நடுவேன். ஒரு செடிக்கு 2 கிலோ கிடைத்தால் போதும், நல்ல வருமானம் கிடைக்கும். எனக்கு பீர்க்கங்காய் நல்ல விளைச்சல் தருவதுடன், சந்தைப்படுத்தல் எளிமையாக உள்ளது.

வியாபாரிகள் தோட்டத்துக்கு வந்து நேரடிக் கொள்முதல் செய்து கொள்கின்றனர். உர நிர்வாகத்தைப் பொறுத்த வரை மீன் அமிலம், ஜீவாமிர்தம் ஆகியவற்றை நானே தயாரித்து பயன்படுத்துகிறேன்.

இயற்கை விவசாயம் செய்ய மன உறுதியும், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.” என்றார்.

இதையடுத்து, காய்கறியில் பூச்சிகள், நோய்கள், எளிய தீர்வுகள் குறித்து பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் பேசுகையில்,

“பூச்சிகளால் காய்கறிப் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. பூச்சிகள், முட்டை, புழு, கூட்டுப்புழு, பூச்சிகள் என 4 அவதாரங்களை எடுக்கின்றன. பூச்சிகள்,கூட்டுப்புழுக்களாக இருக்கும் போதே அவற்றை அழிக்க வேண்டும்.

அதற்கு, மண்ணை கூடுதல் ஈரமாக வைத்திருக்க வேண்டும். அல்லது வேப்பங்கொட்டைத் தூளை மண்ணில் கலந்து விட வேண்டும்.

முதலில் வயலுக்குள் நுழைவது தீமை செய்யும் பூச்சிகள். அடுத்ததாக, அவற்றைத் தேடி நன்மை செய்யும் பூச்சிகள் நுழைகின்றன. செடிகளைத் தின்னும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளாகவும், தீமை செய்யும் பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை நல்ல பூச்சிகளாகவும் நாம் அடையாளம் காணலாம்.

அந்த வகையில் ஒரு வயல் அல்லது தோட்டத்தில் காணப்படும் 40 சதவீதம் பூச்சிகள் மட்டுமே தீமை செய்யும் பூச்சிகள். மீதமுள்ள 60 சதவீதம் பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகளாக இருக்கும்” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நோய்க்குத் தீர்வு தரும் காய்கறிகள் குறித்து காய்கறி வைத்தியம் செய்து சாதனை படைத்த கோவை காய்கறி வைத்தியர் அருண்பிரகாஷ், 15 வகை காய்கள், 10 வகை கீரைகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டும் திருப்பூர் முன்னோடி விவசாயி ஜெகதீஷ், சிறிய இடத்தில் கீரை சாகுபடி செய்து, பெரியளவில் லாபம் ஈட்டும் கோவை முன்னோடி விவசாயி கந்தசாமி ஆகியோர் தங்கள் அனுபவங்களை இக்கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.

Recent News

Latest Articles