கோவை: அவினாசி சாலை மேம்பாலத்தில் ஏறிய வாலிபர் ஒருவர் விபரீத முடிவை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே அவிநாசி சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் அந்த பாலத்தில் ஏறி ஒரு வாலிபர் நடந்து சென்றார்.
அவர் அண்ணா சிலை அருகில் திடீரென பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தார். இதில், அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வாலிபர் யார்? என விசாரித்தனர். அப்போது தற்கொலை செய்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த சுபம் (19) என்பதும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவருக்கு அடுத்த மாதம் பிறந்தநாள் வருவதால் வரும் 22ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்ததார். ஆனால் அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என தெரியவரவில்லை.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் பட்டப்பகலில் பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்கொலை எண்ணம் தோன்றினால் விபரீத முடிவை எடுக்காமல் 104 என்ற தமிழக அரசின் உதவி எண்ணுக்கு அழைக்கவும். வேண்டிய மனநல உதவி கிடைக்கும்.