கோவை: கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி என்று பெயர் எடுத்துக் கொடுத்த தங்களை விட்டுவிட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதா என்று வேதனை தெரிவித்த தூய்மைப் பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனமானது மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த ஒப்பந்த நிறுவனம் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம், வேலை நேரம், மருத்துவ பலன்கள் பற்றி எதையும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களை இங்கு அழைத்து வந்து வேலை செய்ய வைப்பதாகவும் கூறி கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு ஒரு தீர்வு காண வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சிக்குச் சிறந்த மாநகராட்சி என்று பெயர் எடுத்துக் கொடுத்த தங்களை விட்டுவிட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதா என்று வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து, இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.