கோவை: கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்வதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கோவையைச் சேர்ந்த சிட்டிசன் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு கோவை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.
சிட்டிசன் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் தலைவர் ஜெயராமன் கோவை மாநகர காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நகரின் பல்வேறு பகுதிகளில் மத விழாக்கள் மற்றும் அரசியல் ஊர்வலங்களின் போது அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் போக்குவரத்து மாற்றம் ஆகியவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
நகரின் பரபரப்பான சாலைகளான ராஜ வீதி, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை மற்றும் ஆத்துப்பாலம் போன்ற முக்கிய வழித்தடங்களில் மத விழாக்கள் நடைபெறும் போது, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது.
ரயில் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் கலெக்டர் அலுவலகம் போன்ற முக்கியமான இடங்களை அணுகுவதற்கு இந்தச் சாலைகள் மிக முக்கியமானவை என்பதால், இத்தகைய போக்குவரத்து மாற்றங்கள் இவ்வழியாகச் செல்வோரை கடுமையாக பாதிக்கிறது.
ஊர்வலங்களை நடத்துபவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றாலும், அவர்கள் முழு சாலையையும் ஆக்கிரமிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
ஊர்வலங்கள் செல்லும் போது போக்குவரத்து சீராக இருக்கவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். கையிரு வேலை அமைத்து ஊர்வலத்திற்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
போக்குவரத்து மாற்றம் குறித்த முன்கூட்டியே அறிவிப்புகள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.