கோவை: கோவையில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தினர் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துடியலூர் அடுத்த தொப்பம்பட்டியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வங்க தேசத்தை சேர்ந்த 2 பேர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக மாநகர தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று துடியலூர் போலீசார் அந்த நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தில் மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர்.
இவர்களில் 2 பேர் வங்க தேச நாட்டை சேர்ந்தவர்கள் என வந்த புகாரின்பேரில், அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களிடம் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை.

மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் வங்க தேசத்தை சேர்ந்த இருவரும் மேற்கு வங்க மாநிலம் வந்து அங்கிருந்து வேலைக்காக கோவை வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேச நாட்டை சேர்ந்த லோதிப் அலி(29), ஷெரீப்(37) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தில் வேறு யாரேனும் சட்ட விரோதமாக தங்கி உள்ளார்களா? என போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.