கோவை: கோவை, கோவில்பாளையம் அருகே சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து இருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் ஹரிஸ்ரீக்கும் இடையே நேற்று இரவு கோவில்பாளையம் பகுதியில் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஹரிஸ்ரீ தனது இடுப்பில் மறைத்து வைத்து இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வானில் சுட்டு சக்திவேலை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரிஸ்ரீயை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் இருந்து அந்த சட்ட விரோத துப்பாக்கியை மீட்பதற்காக போலீசார் அவரை சம்பவ இடமான காலப்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹரிஸ்ரீ திடீரென தப்பிக்க முயன்றதுடன், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடவும் முயன்று உள்ளதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து, தற்காப்புக்காக போலீசார் ஹரிஸ்ரீயின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த ஹரிஸ்ரீ உடனடியாக மீட்கப்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கைது செய்யப்பட்ட ஹரிஸ்ரீ மீது ஏற்கனவே பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.