நீலகிரி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொன்னியின் செல்வன் கதையின் அடிப்படையில், 7.5 லட்சம் மலர்களுடன் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட சிற்பங்களுடன், 127வது உதகை மலர் கண்காட்சி 2025 முதலமைச்சர் ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மலைகளில் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
கோடை சீசனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்தாண்டு பல்வேறு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த ஆண்டு கோடை விழா, கடந்த 3ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனை திரவியங்கள் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஆகிய மூன்று கண்காட்சிகள் நடைபெற்ற முடிந்துள்ளன.
இதனிடையே, கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் 127வது மலர் கண்காட்சியை, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

இந்த கண்காட்சியில் பூக்களைக் கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த கண்காட்சியில் 275 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தாவரவியல் பூங்காவின் அலங்கார மேடையில் 40 ஆயிரம் தொட்டிகள் பல்வேறு வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பொன்னியின் செல்வன் கதையின் கரு அடிப்படையில் இந்தாண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் ராஜாக்கள் வாழ்க்கை, அவர்கள் அரண்மனை, யானைகள், வீரர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் அரண்மனை நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரண்மனை வடிவம், சிம்மாசனம் உள்ளிட்ட அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 ஆயிரம் மலர்களைக் கொண்டு அன்னப்பறவை, கல்லணையிலிருந்து மலர் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான இன்றே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர்.
தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் தொடங்கி, பூங்கா முழுவதும், வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இக்கண்காட்சி மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
