Header Top Ad
Header Top Ad

கோவையில் கும்கி யானை உதவியுடன் பெண் காட்டுயானைக்கு சிகிச்சை…

கோவை: மருதமலை அருகே கும்கி யானையின் உதவியுடன் கிரேன் மூலம் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது…

கோடை வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறிய தாய் யானை ஒன்று, திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், எழுப்ப முயன்ற காட்சி காண்போரின் இதயத்தை உலுக்கியது.

Advertisement
Lazy Placeholder

கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர். கோவை வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை கண்காணித்து வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தாய் யானை உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்தது.
மயங்கி விழுந்த தாய் யானையின் உடலில் சிறிது நேரத்திற்குப் பின் அசைவு தெரியவே, அருகில் இருந்த குட்டி யானை பதற்றம் அடைந்தது. தனது தாயை எப்படியாவது எழுப்பி விட வேண்டும் என்ற தவிப்புடன், தனது சிறிய தும்பிக்கையால் தாயின் உடலைத் தட்டி எழுப்ப முயற்சித்தது.

இந்த உருக்கமான காட்சி அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
யானையின் நிலைமை மோசம் அடையவே, வனத் துறையினர் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். அவர்களின் அறிவுறுத்தலின் படி, கால்நடை மருத்துவ குழுவினரும், கோவை வனக் குழுவினரும் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

Advertisement
Lazy Placeholder

இன்று அதிகாலை முதல் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், படுத்துக் கிடக்கும் பெண் யானையை நிற்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக, கும்கி யானை துரியனின் உதவியுடன் தற்போது பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் இடையே, சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டி ஊராட்சி நிர்வாகம் அமைத்த குப்பை கிடங்கில் உள்ள கழிவுகளை உட்கொண்டதன் காரணமாக வனவிலங்குகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இதன் காரணமாகவே தாய் யானைக்கு பாதிப்பு ஏற்பட்டதா ? என்ற கோணத்திலும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். தாய் யானை விரைவில் குணமடைய வனத் துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

Recent News

Latest Articles