Advertisement

கோவையில் மாநகராட்சி வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், மாநகராட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்…
கோவை மாநகராட்சியில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில், ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கட்டணங்கள் அநியாயமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதை கண்டித்து, அக்கட்சியினர் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
Advertisement

கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்ற அவசர கூட்டத்தில், 24 பக்கங்களைக் கொண்ட 101, 102, 103 ஆகிய தீர்மானங்கள் எவ்வித விவாதத்திற்கும் இடமளிக்காமல், அஜெண்டா முன்பே வழங்கப்படாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர். இம் மூன்று அஜெண்டாக்களுமே மாநகரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, கட்டடத்தின் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு பாதாள சாக்கடை திட்டத்திற்கான தொகை மற்றும் குடிநீர் கட்டணத்திற்கான வைப்புத் தொகை ஆகியவற்றைத் தீர்மானித்து உள்ளன.
இதன் விளைவாக, இதுவரை ரூ.4.50-க்கு பொதுமக்கள் பெற்று வந்த குடிநீர், தற்போது ரூ.18 முதல் ரூ.150 வரை உயரக் கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஆயிரம் லிட்டருக்கு ரூ.2 மட்டுமே மாநகராட்சி செலுத்தும் நிலையில், பொதுமக்களிடம் மொத்தமாக கொள்ளை அடிக்கும் அநியாய கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்து உள்ளது.
மேலும், ஏற்கனவே ஆண்டுக்கு 6% குடிநீர் வரி உயர்வு அமலில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக ஆண்டுக்கு 3% உயர்த்தப்பட்டு இருப்பது மக்களை சேவை மையமாக கருதும் அரசின் நோக்கத்திற்கு எதிரானது என்றும், அனைத்து சேவைகளையும் வணிகமயமாக்கும் முயற்சியே இது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது என்று கூறினர்.