கோவை: கோவையில் கனமழை பெய்துவரும் நிலையில், நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.

இந்த நிலையில், நொய்யல் ஆற்றில், ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் கரைபுரண்டோடிவரும் நீரில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

சிறிய அளவிலான மீன் வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். மெட்ரோ நகரான கோவையில் காண்பதற்கு அரிய காட்சியாக இது அமைந்துள்ளது.
எனினும் நீரோட்டம் அதிமுள்ள நிலைகளில் குழந்தைகள் விளையாடச் செல்வதை பெற்றோர் கவனிக்க வேண்டும். மழை வெள்ளம் அதிகரிக்கும் நேரத்தில் சிறுவர்களை நீர் நிலைகளில் விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
