கோவை: கோடை விடுமுறை முடிந்து இன்று கோவையில் பள்ளிக்கு திரும்பிய குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி முழு ஆண்டு தேர்வுகள் முடிந்த பின்னர் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
தொடர்ந்து ஜூன் 2ம் தேதி தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கோவையில், பல்வேறு பள்ளிகளில் சிறப்பு அலங்காரங்கள், வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மாணவர்களை மகிழ்வுடன் வரவேற்கும் சூழல் பல பள்ளிகளில் உருவாக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளி செல்லும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர், அவர்களுக்கு முத்தமிட்டு ஆண்டின் முதல் வகுப்புக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி சாலையில் உள்ள புனித பிரான்சில் பள்ளியில் இன்று பள்ளி வந்த மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது. மிக்கி மவுஸ் உள்ளிட்ட கார்டூன் வேடமணிந்த நபர்கள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

முதல் நாள் என்பதால் இன்று பல்வேறு பள்ளிகளிலும் பாடங்கள் எடுப்பதற்கு பதிலாக, வெவ்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கோடை விடுமுறைக்குப் பின் தங்கள் நண்பர்களைச் சந்தித்த மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு, கைகுலுக்கு மகிழ்ந்தனர். மாணவர்கள் தங்கள் விடுமுறையை எப்படி கழித்தனர் என்பதை ஒவ்வொருவராக வகுப்பறையில் கூறினர்.

இந்த காட்சிகள் ஒவ்வொருவரின் பள்ளி வாழ்க்கையையும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்தன.
