கோவை: துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள் என்ற முழக்கத்துடன் கேரளாவில் இருந்து புறப்பட்ட புல்லட் பைக் பேரணி இன்று கோவையை கடந்து சென்றது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சலோ எல்ஓசி (Chalo LOC) என்ற புதிய சமூக அமைப்பு, அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் ஒரு மாபெரும் புல்லட் பைக்கர் பேரணியை ஆரம்பித்துள்ளது.

கேரளாவின் ஆன்மீகத் தலம் காலடியில் இருந்து தொடங்கி, ஜம்மு – காஷ்மீரின் எல்லை அருகே உள்ள டீட்வாலில் உள்ள சாரதா யாத்ரா க்ஷேத்ராவில் நிறைவடையும் இந்தப் பேரணி, சுமார் 3600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க உள்ளது.
துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள் என்ற முழக்கத்துடன், இந்த பயணம் பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியையும், நாட்டின் மீள் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த புல்லட் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பங்கேற்கின்றன.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அப்பகுதியில் அமைதி நிலை திரும்ப வேண்டுமென்ற கோரிக்கையையும் வலியுறுத்தும் வகையிலும், இந்த அமைதிப் பயணம் நடத்தப்படுகிறது.
இந்த பயணம் ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கியது. பேரணி செல்வோர் இன்று கோவை வந்தனர். இப்பேரணி ஜூன் 12ல் முடிவடைகிறது.

புல்லட் பைக்குகள் கர்ஜிப்பது இனி வன்முறைக்கு பதிலாக அமைதிக்காக என்றும், பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக என்றும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.