கோவை: கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கான டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.
கடந்த ஆண்டு கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலின், இங்கு ரூ.126 கோடியில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து தங்க நகை பூங்கா அமைப்பதற்காக ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த ஆய்வு அறிக்கை கடந்த மே மாதம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பரசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆய்வறிக்கையின் படி, குறிச்சி பகுதியில் 2.46 ஏக்கரில், 8.5 லட்சம் சதுர பரப்பளவில் இந்த பிரம்மாண்ட தங்க நகை பூங்கா அமைய உள்ளது.
இந்த தொழிற்பூங்காவில், நகைப்பட்டறைகள், 3டி பிரிண்டிங் மையங்கள் மற்றும் லேசர் பிரிண்டிங் மையங்கள் அமைய உள்ளன.
மேலும், ஹால்மார்க் தர பரிசோதனைக் கூடம், பாதுகாப்பு பெட்டகங்கள், கூட்ட ரங்கம், தங்க வேலைகளுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளன.
தங்க நகை பூங்கா

தரத்தளம் மற்றும் 5 தளங்களுடன் தங்க நகை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.45 கோடி மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், சிட்கோ நிறுவனம் இதற்கான டெண்டர் கோரியுள்ளது.
கட்டுமானப் பணிகள் தொடங்கியது முதல் 18 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.