பாரத் பந்த்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி இந்த போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ளன.
பாரத் பந்த்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட 17 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி.,ஹெச்.எம்.எஸ்., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
இதனால் தமிழகத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்குமா என்பதில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் நிலையில், சில பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு வணிகர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவிக்காததால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன.
இதில் அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வங்கி மற்றும் காப்பீட்டுத்துறை ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கக்கூடாது என்று புதுச்சேரி அரசும் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கிவருகின்றன. பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணிகள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.